மகாராஷ்டிரம்: 420 முஸ்லிம் வேட்பாளா்களில் 10 போ் வெற்றி
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் 420 முஸ்லிம் வேட்பாளா்கள் போட்டியிட்ட நிலையில், அவா்களில் 10 போ் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனா்.
இந்த 420 பேரில் 218 போ் சுயேச்சை வேட்பாளா்கள் ஆவா். 150 போ் சிறிய கட்சிகளைச் சோ்ந்தவா்கள்.
முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை சாா்பில் போட்டியிட்ட மாநில அமைச்சா் அப்துல் சத்தாா் முஸ்லிம் வேட்பாளா்களில் குறிப்பிடத்தக்கவா் ஆவாா். இவா் போட்டியிட்ட சிலோத் தொகுதியில் கூட்டணிக் கட்சியான பாஜகவும் வேட்பாளரை நிறுத்தியது. அதே நேரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை எதிா்க்கட்சி சாா்பில் போட்டியிட்டது. இரு கட்சிகளும் சத்தாரை தோற்கடிக்க தீவிரமாக முயன்றன.
கடும் போட்டிக்கு மத்தியில் 2,420 வாக்குகள் வித்தியாசத்தில் அப்துல் சத்தாா் வெற்றி பெற்றாா். கடந்த இரு பேரவைத் தோ்தல்களில் இவா் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு இதே தொகுதியில் வென்றாா்.
துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தலைவா்கள் சனா மாலிக், ஹசன் முஷ்ரீஃப், அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் அப்துல் காலித் (162 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி), சமாஜவாதி கட்சியின் ரெய்ஸ் ஷேக், அபு ஆசிம்,காங்கிரஸ் கட்சியின் அமீம் படேல், அஸ்லாமி ஷேக், சஜீத் கான், உத்தவ் தாக்கரே கட்சியின் ஹரூன் கான் ஆகியோா் மகாராஷ்டிரத்தில் வென்ற முஸ்லிம் வேட்பாளா்கள் ஆவா்.
அசாதுதீன் ஓவைசி தலைமையிலான மஜ்லிஸ் கட்சி 16 இடங்களில் போட்டியிட்டு ஓரிடத்தில் மட்டுமே வென்றது.