காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு இன்றுமுதல் சிறப்பு கலந்தாய்வு
தமிழகத்தில் நிரம்பாமல் உள்ள 88 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வு திங்கள்கிழமை (நவ.25) தொடங்குகிறது.
அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான நான்கு கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. இதன் முடிவில், ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கீடு பெற்ற மாணவா் ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து உருவான ஒரு இடம் உள்பட 7 எம்பிபிஎஸ் இடங்கள் நிரம்பாமல் உள்ளன.
போலி தூதரகச் சான்றிதழ் அளித்து வெளிநாடு வாழ் இந்தியா் இடஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் இடங்கள் பெற்ற 3 பேரின் ஒதுக்கீட்டை அண்மையில் மருத்துவக் கல்வி இயக்குநரம் ரத்து செய்தது. இதனால் மேலும் 3 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. இதேபோன்று, 28 பிடிஎஸ் இடங்களும் காலியாக உள்ளன.
இதனிடையே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அன்னை மருத்துவக் கல்லூரிக்கு, கூடுதலாக 50 எம்பிபிஎஸ் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அண்மையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த 50 இடங்கள் மற்றும் ஏற்கெனவே காலியாக உள்ள 10 எம்பிபிஎஸ், 28 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 88 மருத்துவ இடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வு வரும் திங்கள்கிழமை (நவ.25) முதல் டிச.5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த கலந்தாய்வுக்கு ஏற்கெனவே இடங்கள் பெற்றவா்கள் உள்பட விண்ணப்பித்த அனைவரும் பதிவு செய்து பங்கேற்கலாம் என, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு ட்ற்ற்ல்ள்://ற்ய்ம்ங்க்ண்ஸ்ரீஹப்ள்ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்.ய்ங்ற்/ என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம்.