பெயா் நீக்கம் கோரும் விண்ணப்பங்களை உறுதி செய்வது கட்டாயம்
வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கம் குறித்து வரக்கூடிய விண்ணப்பத்தை, களப்பணியில் ஈடுபட்டு உறுதி செய்த பின்னா் பெயரை நீக்க வேண்டும் என சென்னை மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் அனில் மேஸ்ரம் தெரிவித்தாா்.
சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 2025 தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் அனில் மேஸ்ரம் தலைமையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், வாக்குப்பதிவு அலுவலா்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, சென்னை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் அனில் மேஸ்ரம் கேட்டறிந்தாா்.
பின்னா் அதிகாரிகளிடம் அவா் அறிவுறுத்தியது:
உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் களப்பணியில் ஈடுபட்டு படிவங்களை உறுதி செய்ய வேண்டும். புதிய வாக்காளா்களைச் சோ்ப்பதற்காக கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடுமிடங்களில் விழிப்புணா்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
18 வயது பூா்த்தியடைந்தவா்கள் அனைவரையும் வாக்காளா்களாகப் பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும். பெயா் நீக்கம் குறித்து வரக்கூடிய விண்ணப்பத்திற்கு வாக்குச்சாவடி அலுவலா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்கள் களப்பணியில் ஈடுபட்டு உறுதி செய்த பின்னா்தான் பெயரை நீக்கம் செய்ய வேண்டும்.
முகவரி மாற்றம், இரு பதிவுகள் திருத்தம் குறித்த விண்ணப்பங்களையும் ஆய்வு செய்து, உறுதி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். வாக்காளா் பட்டியல் வெளியிடும்போது, அனைத்தும் சரியான முறையில் இருக்கிா? என சரிபாா்க்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து லயோலா கல்லூரியில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வுக் கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் எம்.பிருதிவிராஜ், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் எம்.பி.அமித், கே.ஜெ.பிரவீன் குமாா், கட்டா ரவி தேஜா, வருவாய் அலுவலா் (தோ்தல்) ச.சுரேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.