ஆவடி ரயில் நிலையத்தில் மந்தகதியில் ’நகரும் படிக்கட்டு பணி'
ஆவடி ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டு வரும் நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) பணி மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இதனால், நடைமேம்பாலம் மீது ஏறமுடியாத பயணிகள் சிரமமடைந்து வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள ஆவடி ரயில் நிலையம் முக்கிய ரயில் நிலையமாக திகழ்கிறது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட ஆவடியில், போர் தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், அண்ணனூர் ரயில்வே பணிமனை, இந்திய உணவு கழகம் மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, விமானப்படை, ஆகியவற்றின் பயிற்சி மையங்களும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன.
ஆவடி ரயில் நிலையத்தை தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி சென்று வருகின்றனர். இந்த ரயில் நிலையத்தில் 4 நடைமேடைகள் (பிளாட்ஃபார்ம்) உள்ளன.
பொதுமக்கள் பேருந்து நிலையத்துக்குச் செல்லவோ அல்லது மார்க்கெட்டுக்கு செல்லவோ ரயில் நிலைய கடவுப் பாதையை (ரயில்வே கேட்) கடந்துதான் செல்ல வேண்டும். இவ்வாறு கடவுப் பாதையை கடந்து செல்லும் போது, கடந்த பல ஆண்டுகளில் ரயிலில் அடிபட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதைத் தடுக்கும் வகையில், புதிய நடைமேம்பாலம் அண்மையில் கட்டப்பட்டது. அத்துடன், கடவுப் பாதை வழியும் சுவர் அமைத்து மூடப்பட்டது. இதனால், பொதுமக்கள் ரயில் நிலையத்தின் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்துக்குச் செல்ல நடைமேம்பாலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், இந்த நடைமேம்பாலம் மிக உயரமாக இருப்பதால், வயதானவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பயணிகளும் நடைமேம்பாலத்தில் ஏற மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) அமைக்கும் பணி சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. 1, 2-ஆவது மற்றும் 4-ஆவது நடைமேடைகளில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இப்பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருவதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது:
ஆவடி ரயில் நிலையத்தில் 1 மற்றும் 4-ஆம் நடைமேடைகளில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். இரண்டாவது நடைமேடையில் மட்டும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி சற்று காலதாமதமாகும் என்றனர்.