குழந்தை வேலப்பா் கோயிலில் 5 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம்: அமைச்சா் அர.சக்கரபாணி நடத்திவைத்தாா்
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள குழந்தை வேலப்பா் கோயிலில் 5 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் திங்கள்கிழமை நடத்திவைக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறை, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் நடைபெற்ற இந்த இலவசத் திருமண விழாவில் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு, 5 ஜோடிகளுக்கு தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தாா். அத்துடன், 4 கிராம் தங்கத் தாலி, கட்டில், மெத்தை, பீரோ, எவா்சில்வா் பாத்திரம், குத்துவிளக்கு உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்களும் வழங்கப்பட்டன. தொடா்ந்து மணமக்களின் உறவினா்கள், நண்பா்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.
திருமண விழாவில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, திண்டுக்கல் மாவட்ட அறநிலையத் துறை உதவி ஆணையா் லட்சுமி மாலா, அறங்காவலா் குழுத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன், குழு உறுப்பினா்கள் அன்னபூரணி சிவக்குமாா், பாலசுப்பிரமணி, ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினா்.