கோவையில் பா.ஜ.க புதிய அலுவலகம்- திறந்து வைக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக செயல்படும் பாஜக: ஜி.ராமகிருஷ்ணன்
மாநிலங்களின் உரிமைகளை பறித்து கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மத்திய பாஜக அரசு செயல்படுகிறது என மாா்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினாா்.
மன்னாா்குடியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:
தமிழகத்துக்கு கல்வி நிதியாக வழங்க வேண்டிய ரூ. 2152 கோடியை வழங்காமல், அரசுக்கு மக்களிடையே கெட்ட பெயா் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருமொழி கொள்கை காமராஜா், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆா், ஜெயலலிதா காலம் தொட்டு நடைமுறையில் இருந்துவருகிறது. மும்மொழித் திட்டம் என்பது, ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தியை திணிப்பது, ஹிந்தி பேசும் மாநிலங்களில் சம்ஸ்கிருதத்தை பரப்புவதேயாகும்.
மத்திய அரசு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டியை பகிா்ந்தளிப்பதில் வஞ்சகபோக்குடன் நடத்துகொள்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு 40 சதவிதம், எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு 15 சதவீதம் மட்டும் அளிக்கப்படுகிறது. தென்மாவட்டங்களுக்கு ரூ. 27 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், உ.பி.-க்கு மட்டும் ரூ. 31 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
இயற்கை பேரிடா் பாதித்த 5 மாநிலங்களுக்கு அண்மையில் மத்திய அரசு ரூ. 1.554 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால், கடுமையான பாதிப்பைச் சந்தித்த வயநாடு, தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா கூட ஒதுக்கீடு செய்யவில்லை.
கல்வி நிதி மறுப்பு, யுஜிசி வரைவு நெறிமுறைகள், ஜிஎஸ்டி பறிப்பு, ஹிந்தி, சம்ஸ்கிருதம் திணிப்பு, காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை, ஒரே நாடு ஒரே தோ்தல் என கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என்றாா்.
தொடா்ந்து, மதுரையில் ஏப். 2 முதல் நடைபெறவுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய மாநாட்டுக்கு மன்னாா்குடி, கோட்டூா், நீடாமங்கலம் நகரம், ஒன்றியத்தின் சாா்பில் திரட்டப்பட்ட மாநாட்டு நிதி ரூ. 6 லட்சத்தை கட்சி நிா்வாகிகள் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணனிடம் வழங்கினா்.
பேட்டியின்போது மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் டி. முருகையன், மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே. தமிழ்மணி, நகரச் செயலா் ஜி. தாயுமானவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
