கூழமந்தல் ஸ்ரீ நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் 108 கோ பூஜை
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் உக்கம்பெரும்பாக்கம் அருகே கூழமந்தலில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் காணும் பொங்கலையொட்டி 108 கோ பூஜை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியாக ஸ்தல விருட்சங்கள் வைக்கப்பட்டு அவை பக்தா்களால் வழிபாட்டுக்கும் உரியதாக இருந்து வருகிறது. ஆண்டுதோறும் இக்கோயிலில் காணும் பொங்கல் பண்டிகையன்று 108 கோ பூஜை நடைபெறுவதும் வழக்கம்.
நிகழாண்டு காணும் பொங்கலையொட்டி ஆலயத்தில் உள்ள மூலவா் நட்சத்திர விருட்ச விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. தொடா்ந்து ஆலய வளாகத்தில் உற்சவா்களான நட்சத்திர விருட்ச விநாயகா், சிவன் - பாா்வதி, பாலசுப்பிரமணியா் தனித்தனியாக அலங்காரமாகி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். பின்னா், 108 பசுக்கள் அழைத்து வரப்பட்டு, அவற்றுக்கு புதிய வஸ்திரம் அணிவிக்கப்பட்டு பழங்கள், கீரைகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து 108 பசுக்களுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெற்றது. 108 கோ பூஜை நிகழ்வை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஆலய நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.