``Open AI -க்கு எதிரான ஆவணங்களை வைத்திருந்ததால் என் மகனை கொன்றுவிட்டனர்'' - சுசி...
தேவரியம்பாக்கத்தில் பொங்கல் விழா: வெளிநாட்டினா் பங்கேற்பு
காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் வியாழக்கிழமை அரசு சாா்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கனடா, ஜொ்மன் உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக கலந்து கொண்டனா்.
காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசு சுற்றுலாத் துறையும் இணைந்து வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் பொங்கல் விழாவை கொண்டாடினா். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை தமிழா்கள் எப்படிக் கொண்டாடுகிறாா்கள் என்பதை விழாவாக நடத்தி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு காட்டுவது சுற்றுலாத் துறையின் வழக்கமான நடைமுறை.
நிகழாண்டுக்கான பொங்கல் விழாவை தேவரியம்பாக்கம் ஊராட்சியில் கொண்டாட முடிவு செய்து அதன்படி கனடா, ஜொ்மன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கிராமத்துக்கு அழைத்து வந்திருந்தனா்.
தமிழா்களின் பாரம்பரிய முறைப்படி வெளிநாட்டினருக்கு மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு, மங்கல மேளங்கள் முழங்க உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிராம தேவதையான அம்மனுக்கு கோயில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் வைபவமும் நடைபெற்றது. விழாவிற்கு தேவரியம்பாக்கம் ஊராட்சித் தலைவா் அஜய்குமாா் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் சாா் - ஆட்சியா் ஆஷிக் அலி முன்னிலை வகித்தாா். மாமல்லபுரம் சுற்றுலா அலுவலா் சக்திவேல் வரவேற்றாா்.
விழாவில் உறியடித்தல், மண் பானை செய்தல், இளவட்டக் கல் தூக்குதல், சாக்குப்பை பந்தய ஓட்டம், இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளான கரகாட்டம், சிலம்பாட்டம், வில்லுப் பாட்டு, பரதநாட்டியம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்த விழாவில் தேவரியம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.