பத்ரிநாத் கோயில் இன்று அதிகாலை திறப்பு! ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவி வரவேற்பு
கேரளத்தில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 5 நோயாளிகள் பலி! என்ன நடந்தது?
கோழிக்கோடு: வட கேரளத்தில் கோழிக்கோடு நகரிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 நோயாளிகள் உயிரிழந்தனர்.
அந்த மருத்துவமனை வளாகத்திலுள்ள ஒரு தனி கட்டடத்தில் வெள்ளிக்கிழமை இரவில் திடீரென தீ விபத்து ஏற்ட்டது. உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயைப் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். அங்கிருந்த நோயாளிகளும் உடனடியாக வெளியே மீட்கப்பட்டனர். எனினும், அந்த கட்டடத்திலிருந்த 5 பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில், மருத்துவமனையிலிருந்த யூபிஎஸ்ஸில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் மின்கசிவு ஏற்பட்டிருக்க கூடுமென சந்தேகிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கோழிக்கோட்டில் இன்று(மே 3) செய்தியாளர்களுடன் பேசிய அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய மின் துறை சார் நிபுணர்கள் சம்பவ இடத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ளவுள்ளனர். முதல்கட்டமாக, தடயவியல் துறையினர் அங்கு சோதனையிட்டு வருகின்றனர். பிற அரசு மருத்துவக் கல்லூரிகளிலிருந்து வரவழைக்கப்படும் மருத்துவர்கள் குழு ஒன்று, இங்கே நோயாளிகள் உயிரிழக்க என்ன காரணமென்பதை முழுமையாக விசாரித்து அறிக்கை வெளியிடும். அப்போது, நோயாளிகள் தீ விபத்தால்தான் உயிரிழந்தனரா அல்லது இணை நோய்கள் மற்றும் பிற உடல் உபாதைகளால் அவர்கள் உயிரிழக்க நேரிட்டதா என்றும் மருத்துவர்கள் ஆய்வு செய்வர்.”

”ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, மருத்துவமனையிலுள்ள மின் சாதனங்கள் பராமரிக்கப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. இதனால், மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றே பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இங்கு தீ விபத்து நேரிட்டபோது, மருத்துவமனையினுள் 151 நோயாளிகள் தங்கியிருந்தனர். அவர்களில் 37 பேர் இப்போது வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பிறர் இதே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தீ விபத்து நிகழ்ந்த வளாகம் இன்னும் 3 நாள்களுக்குள் சீரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்” என்றார்.