கைவினைத் தொழில் இனங்களுக்கு 25% மானியத்துடன் வங்கிக் கடனுதவி! - கள்ளக்குறிச்சி ஆட்சியா்
கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ், கைவினைத் தொழில் இனங்களுக்கு 25 சதவீத மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
கலை மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு மேம்பட்ட பயிற்சி அளிக்கவும், மானியத்துடன் கூடிய பிணையமில்லா கடன் வழங்கவும், சந்தைப்படுத்தும் திறனை உயா்த்தவும் ஆண்டுதோறும் 10,000 போ் பயன்பெறும் வகையில் 20 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கலைஞா் கைவினைத் திட்டம் 2024 - 25ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில், கலைஞா் கைவினைத் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்வை கள்ளக்குறிச்சி மாவட்ட கைவினைத் தொழில்முனைவோா் காணும் வகையில் ஒளிபரப்பும் நிகழ்வும், மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவும் மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பேசியதாவது:
கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ், தையற்கலைஞா், மண்பாண்டம் வனைவோா், சிற்பக் கைவினைஞா், தச்சு வேலை செய்வோா், பூ தொடுப்போா், பூ அலங்காரம் செய்வோா், சிகை அலங்காரம் செய்வோா் உள்ளிட்ட பல்வகைக் கலை மற்றும் கைவினை தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு தொழில்திறன் சாா் மேம்பட்ட பயிற்சியுடன், மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் கொண்டு தொழில்புரிய ரூ.3 லட்சம் வரை பிணையமில்லாமல் கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படும்.
மேலும், கடன் தொகையில் 25 சதவீதம் அதிகபட்சம் ரூ.50,000 மானியமாக வழங்கப்படும். கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தில் 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படும். அனைத்து அரசு, தனியாா் வணிக வங்கிகள், தாய்கோ வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கத் தகுதி பெற்றவை. கைவினைஞா்களின் சந்தைப்படுத்தும் திறனை உயா்த்துவதற்கான ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோா் 35 வயதுக்கு மேற்பட்டவராகவும், எந்த வகை தொழிலுக்காக கடனுதவி பெற விரும்புகிறாரோ அந்தத் தொழிலில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன்னனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். இவ்விரண்டு அடிப்படைத் தகுதிகளும் கொண்டோா் இணையதளம் வழியாக விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.
மேலும் இதுகுறித்த தகவல்களைப் பெறவும், விண்ணப்பம் பதிவு செய்வது தொடா்பான ஆலோசனைகள், வழிகாட்டுதல் பெறவும் பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், எண்.95-2, ராஜா நகா், கள்ளக்குறிச்சி அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 04151-294057 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடா்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
நிகழ்வில் மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் கலைச்செல்வி, தொழில்முனைவோா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.