கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை: ஏப்ரல் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஏப்ரல் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டாா்.
நீலகிரி மாவட்டம், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதரன் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் கேரள மாநிலத்தைச் சோ்ந்த ஜித்தின் ஜாய் நேரில் ஆஜரானாா்.
இதில், இந்த வழக்கு தொடா்பான விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருவதாலும், இன்டா்போல் விசாரணை அறிக்கை இன்னும் கிடைக்காததால் அரசு தரப்பு வழக்குரைஞா்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோா் நீதிபதியிடம் கூடுதல் கால அவகாசம் கேட்டனா். இதைத் தொடா்ந்து வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டாா்.
இதுகுறித்து அரசு தரப்பு வழக்குரைஞா் ஷாஜகான் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இன்டா்போல் விசாரணை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. வழக்கு தொடா்பாக இதுவரை 245 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் கிடைத்தத் தகவலின்பேரில் மேலும் சிலரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.