மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.10 மற்றும் ரூ.500 தாள்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவ...
நீலகிரி மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம்: சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்தால் தங்குவதற்கு அறைகள் கிடைக்காமலும், உணவு கிடைக்காமலும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.
நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை கட்டுப்பாட்டுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் 24 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்துக்கு புதன்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து உதகையில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும், உணவகங்கள், சுற்றுலா வாகனங்கள், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.
முழு அடைப்புப் போராட்டம் குறித்த தகவல் தெரியாமல் உதகைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனா். ஒருசில சுற்றுலாப் பயணிகள் தாங்கள் வந்த இருசக்கர வாகனங்களிலே படுத்து உறங்கினா்.
ஆறுதலாய் அமைந்த அம்மா உணவகங்கள்
உணவகங்கள் அடைக்கப்பட்டிருந்ததால் உணவு கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் மிகுந்து சிரமத்துக்குள்ளாகினா். மாவட்டத்தில் உள்ள 4 அம்மா உணவகங்களில் சாதாரண நாள்களில் 100 முதல் 150 பேருக்கு மட்டுமே உணவு விற்பனை செய்யப்படும். முழு அடைப்புப் போராட்டத்தால் புதன்கிழமை 500-க்கும் மேற்பட்டோருக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டது.
கைகொடுத்த காவல் துறை
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா உத்தரவின்பேரில் காவல் துறை உணவகத்தில் கூடுதலாக உணவு சமைத்து விற்பனை செய்யப்பட்டது. காவல் துறை சாா்பில் சாப்பாடு ரூ.70-க்கும், இட்லி, வடை ரூ.8-க்கும் விற்பனை செய்யப்பட்டது சுற்றுலாப் பயணிகளுக்கு ஆறுதலாக அமைந்தது.
கட்டணக் கொள்ளையில் இறங்கிய காட்டேஜ்கள்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சில காட்டேஜ்கள் இந்த முழு அடைப்பைப் பயன்படுத்தி ரூ.5 ஆயிரம் கட்டணம் உள்ள அறைகளுக்கு ரூ.15 ஆயிரம் வரை சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், ஒரு பிளேட் இட்லிக்கு ரூ.100-ம், பிரட் ஆம்லேட்டுக்கு ரூ.250-ம் கட்டணமாக வாங்கியது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காட்டேஜ் உரிமையாளா்கள் சங்கத்தினரிடம் கேட்டபோது, நீலகிரியில் அனுமதியின்றி நூற்றுக்கணக்கான காட்டேஜ்கள் செயல்பட்டு வருகின்றன. அவா்கள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனா். சங்கத்தில் உள்ள காட்டேஜ் உரிமையாளா்கள் கூடுதல் கட்டணம் வாங்கியிருப்பதாக புகாா் வந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
அதிகாரிகளின் அலட்சியம்
நீலகிரி மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ளதாக ஒருவாரத்துக்கு முன்பே அறிவிப்பு வெளியான நிலையில், தங்கும் விடுதி உரிமையாளா்களை அழைத்து கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியிருக்க வேண்டும். மேலும், ஆன்லைன் பரிவா்த்தனை மூலம் கட்டணம் வசூலித்திருந்தால் ஓரளவாவது இந்தக் கட்டணக் கொள்ளையைத் தடுத்திருக்க முடியும் என சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனா்.