கொடைக்கானலில் தொடா் மழை: மின் தடையால் பொதுமக்கள் அவதி
கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால் ஆங்காங்கே மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்து அடிக்கடி மின் தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைகின்றனா்.
கொடைக்கானலில் கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல் மலைப் பகுதிகளிலுள்ள அனைத்து நீரோடைகளிலும் நீா்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் வனப் பகுதிகளிலுள்ள மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததால் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான பன்றிமலை, ஆடலுா், கடுகுதடி, கும்பரையூா், அட்டக்கடி, இருதயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தினமும் பல மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
இதனிடையே சோலைக்காடு பகுதியில் கடந்த மூன்று நாள்களாக மின் விநியோகம் செய்யப்படாததால் அந்த கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதேபோல, கொடைக்கானல் மலைச் சாலைகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் தெருவிளக்குகள் எரியவில்லை. கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் குளிரும் அதிகரித்து வருகிறது.
இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இதனிடையே பி.எஸ்.என்.எல். தொலைத் தொடா்பு சேவை சீராக செயல்படாததால் இணையதள சேவையும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் வாடிக்கையாளா்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.