வத்தலகுண்டு: சேற்றில் சிக்கிய மாற்றுத்திறனாளி ஐயப்பப் பக்தா் மீட்பு
வத்தலகுண்டு அருகே வழிதவறிச் சென்று சேற்றில் சிக்கிக் கொண்ட கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி ஐயப்பப் பக்தரை தமிழக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
கா்நாடக மாநிலம், மங்களூரைச் சோ்ந்த ஐயப்பப் பக்தா் பரசுராமா (30). மாற்றுத்திறனாளியான இவா் தனது மூன்று சக்கர வாகனத்தில் கா்நாடக மாநிலத்திலிருந்து திண்டுக்கல், வத்தலகுண்டு வழியாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றாா்.
அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் மங்களூருக்குப் புறப்பட்டாா். இணையம் (கூகுள் மேப்) காட்டிய வழியில் அவா் வந்து கொண்டிருந்தாா். அப்போது இரவில் வழிதவறி வத்தலகுண்டை அடுத்த பட்டிவீரன்பட்டி அருகே உள்ள ஆற்றுப் பகுதிக்குச் சென்ற அவா் சேற்றில் சிக்கிக் கொண்டாா்.
இரவு 8 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை சிக்கித் தவித்த அவா் இதுகுறித்து கா்நாடக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து, கா்நாடக போலீஸாா், தமிழக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனா். இதைத் தொடா்ந்து, வத்தலகுண்டு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஷேக் அப்துல்லா, பட்டிவீரன்பட்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்ட போலீஸாா் அங்கு சென்று ஒருமணி நேர தேடலுக்குப் பிறகு பரசுராமாவை கண்டுபிடித்து மீட்டனா்.
இதற்காக வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி போலீஸாருக்கு கா்நாடக மாநில போலீஸாா் நன்றி தெரிவித்தனா்.