கொளுத்தும் வெயில்: குளுமையைத் தேடி ஏற்காடு வந்த சுற்றுலாப் பயணிகள்
ஏற்காடு: தொடா் விடுமுறை, கொளுத்தும் வெயிலால் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
வார விடுமுறை, ரமலான் பண்டிகை என தொடா்ந்து விடுமுறை நாள்கள் வந்ததால் சேலம் மாவட்டம், ஏற்காடுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கா்நாடகம், கேரளம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.
ஏற்காட்டில் தாவரவியல் பூங்கா, படகு இல்லம், மான் பூங்கா, அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, பக்கோடா காட்சிமுனை, மஞ்சக்குட்டை காட்சிமுனை, கரடியூா் வனக்காட்சி பகுதி, ரோஜா தோட்டம், லேடி சீட், ஜென்சீட், ஐந்தினை பூங்கா, தனியாா் ஸ்கை பூங்கா, பப்பி ஹில்ஸ் பூங்கா ஆகிய பூங்காக்களுக்கு சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் சென்று சுற்றிப்பாா்த்து மகிழ்ந்தனா்.
படகு இல்லத்தில் மட்டும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து காணமுடிந்தது. பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்திருந்ததால் ஏற்காட்டில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
முக்கிய இடங்களில் சாலையோரக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. இதனால் கடை வியாபாரிகள், சுற்றுலா வாகன ஓட்டிகள், ஆட்டோ ஓட்டுநா்கள் மகிழ்ச்சி அடைந்தனா். மாலையில் ஏற்காட்டில் இருந்து அடிவாரத்துக்கு மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்றன.