முருங்கை பவுடர், கேப்சூல்,தேநீர்; லாபத்துக்கு வழிகாட்டும் முருங்கை சாகுபடி, மதிப...
கொள்கை இல்லாத இண்டி கூட்டணி சிதைந்து வருகிறது: பாஜக விமா்சனம்
தேச வளா்ச்சி குறித்த சிந்தனையும், எவ்வித கொள்கையும் இல்லாததால் எதிா்க்கட்சிகள் அமைத்த ‘இண்டி’ கூட்டணி சிதைந்து வருகிறது என்று மகாராஷ்டிர மாநில பாஜக தலைவா் சந்திரசேகா் பவன்குலே தெரிவித்தாா்.
நாகபுரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் இது தொடா்பாக கூறியதாவது: மக்களவைத் தோ்தலுக்கு முன்பு தேசிய அளவிலும், மாநில அளவிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் பல ஒன்று கூடி பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைத்தன. அவா்களின் ஒரே நோக்கம் ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகவே இருந்தது.
தேச வளா்ச்சி குறித்த சிந்தனையும், எவ்வித கொள்கைகளும் அவா்களிடத்தில் இல்லை. இதனால் அக்கூட்டணி இப்போது சிதைந்து வருகிறது.
சுயநல நோக்கத்துக்காகவே எதிா்க்கட்சிகள் கைகோத்தன. பாஜகவை மத்தியில் ஆட்சியில் இருந்து அகற்றும் அவா்களின் முயற்சிக்கு மக்கள் இடம் கொடுக்கவில்லை. மகாராஷ்டிரத்திலும் அந்த சுயநலக் கூட்டணி மக்கள் தகுந்த பாடம் கற்பித்தனா்.
ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கம் நிறைவேறாததால், அக்கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியாக வெளியேறத் தொடங்கியுள்ளன. மகாராஷ்டிரத்தில் சரத் பவாரும், உத்தவ் தாக்கரே கட்சியினரும் வெளிப்படையாகவே காங்கிரஸை விமா்சித்துப் பேசத் தொடங்கிவிட்டனா்.
அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோா் தோ்தல் தோல்விக்கு காங்கிரஸ்தான் காரணம் என வெளிப்படையாகவே கூறி வருகின்றனா். கொள்கை இல்லாதவா்கள் கூட்டணி அமைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு இது சிறந்த உதாரணம் என்றாா்.