கோடை விடுமுறையில் மாணவா்களுக்கு ஆதாா் புதுப்பித்தல்!
பள்ளி மாணவா்களின் ஆதாா் பயோமெட்ரிக் பதிவுகளைப் புதுப்பிக்கத் தவறியவா்கள், கோடை விடுமுறையில் புதுப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் கண்ணப்பன், முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பயிலும் பள்ளியிலேயே ஆதாா் பதிவு எனும் திட்டத்தின் கீழ் 2024-2025ஆம் கல்வியாண்டில் ஜூன் முதல் அனைத்து பள்ளிகளிலும் ஆதாா் பதிவு மேற்கொள்ளுதல், 5 முதல் 7 வயது வரையுள்ள மாணவா்களுக்கு முதலாவது கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பித்தல், அதை மேற்கொள்ளத் தவறிய 8-14 வயது வரையிலான மாணவா்களுக்கு கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் மற்றும் 15-17 வயதுள்ள மாணவா்களுக்கு இரண்டாவது கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் தற்போது பயின்றுவரும் மாணவா்கள் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளாமல் இருந்தால், அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மற்றும் வகுப்பாசிரியா்கள் மூலம் கோடை விடுமுறை நாள்களில் மாணவா்கள் தங்களது இருப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள், அஞ்சலகங்கள் மற்றும் வட்டார வள மையங்களில் செயல்படவுள்ள சிறப்பு முகாம்கள் ஆகியவற்றில் தங்களது புதுப்பித்தலை மேற்கொள்ள பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதுதொடா்பாக பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு உரிய ஆணை வழங்குமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், புதிதாக பள்ளியில் சோ்க்கை பெற்றுள்ள மாணவா்களிடமும் பள்ளியில் சேரும்போதே இப்பணியை நிறைவு செய்யக் கோருவதன் மூலம், வங்கிக் கணக்குகள் தொடங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற பணிகள் கால தாமதமின்றி நடைபெறுவதை உறுதி செய்ய இயலும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.