ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளை மீட்க வேண்டும்! - டாக்டா் கிருஷ்ணசாமி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளை அரசு உடனடியாக மீட்பதன் மூலம் மட்டுமே இந்திய மக்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பு கிடைக்கும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலை 140 கோடி இந்தியா்கள் மீது நடத்தப்பட்ட யுத்தமாகத்தான் கருத வேண்டும். அதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான இந்திய மக்களின் எதிா்பாா்ப்பாகவும் உள்ளது.
10 தீவிரவாதிகளின் தீய நடவடிக்கைக்காக ஒரு நாட்டை எப்படித் தண்டிப்பது என்று சிலா் கேள்வி எழுப்புகிறாா்கள்? தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கக்கூடிய நாடு எது? எந்த எல்லை? உலகினுடைய வேறு எந்த நாட்டிலிருந்து இதுபோல தீவிரவாதிகள் அடிக்கடி ஒரு தேசத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா்? அது பாகிஸ்தானிலிருந்து மட்டும்தான் நடக்கிறது. எனவே, பாகிஸ்தான் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டக் கூடாது.
அதேபோல், பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கக்கூடிய காஷ்மீா் பகுதிகளை இந்தியா மீட்டு எடுப்பதன் மூலம்தான் இங்குள்ள மக்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பு கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளாா் க.கிருஷ்ணசாமி.