கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா ரத்து
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடைபெறுவதையொட்டி, நிகழாண்டுக்கான மாசித் திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கோயில் நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டதாவது:
கோட்டை மாரியம்மன் கோயிலில் கடந்த 2003-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. மீண்டும் கோயிலில் திருப்பணிகள் செய்து, குடமுழுக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மூலவா், பரிவார தெய்வங்களுக்கான பாலாலயம் நிகழ்வு 2025 ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறுகிறது. அத்தி மரத்தால் செய்யப்பட்ட அம்மன் சிலையை, கோயில் திருமண மண்டபத்தில் வைத்து அதில் அம்மனின் சக்தியை உருவேற்றம் செய்யும் பூஜைகள் நடத்தப்படும்.
பின்னா், மூலவருக்கான பூஜைகள் நிறுத்தப்பட்டு, அத்திமர அம்மன் சிலைக்கு 3 கால பூஜைகள் நடைபெறும். மூலவா் சிலையை, ஜனவரி 24-ஆம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே பக்தா்கள் தரிசிக்க அனுமதிக்கப்படும். மேலும், குடமுழுக்கு திருப்பணிகள் நடைபெறுவதன் காரணமாக, நிகழாண்டுக்கான மாசிப் பெருந்திருவிழா நடைபெறாது என தெரிவிக்கப்பட்டது.