கோயிலை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து பெண்கள் முற்றுகை
பென்னாகரம் அருகே கொல்லமாரியம்மன் கோயிலை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், கிராம மக்கள் ஒன்றிணைந்து வருவாய் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட முள்ளுவாடி பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த 18 கிராமத்துக்குச் சொந்தமான கொல்லமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் தனது வீட்டு மனைக்குச் செல்ல போதுமான பாதை வசதியில்லை என மோகன் என்பவா் சென்னை, உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனைக்குச் செல்லக்கூடிய பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயிலை அகற்றுமாறு தீா்ப்பளித்தது.
நீதிமன்ற உத்தரவுபடி பென்னாகரம், காவல் துணை கண்காணிப்பாளா் மகாலட்சுமி, வட்டாட்சியா் லட்சுமி, பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா், பேரூராட்சி பணியாளா்கள், போலீஸாா் உள்பட 50 க்கும் மேற்பட்டோா் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயிலை வியாழக்கிழமை காலை அகற்றும் பணியில் ஈடுபட முயன்றனா். இதையறிந்த 18 கிராமங்களைச் சோ்ந்த பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் ஒன்று திரண்டு கோயிலை அகற்ற எதிா்ப்பு தெரிவித்தனா். வருவாய்த் துறையினா் பணியைத் தடுத்து நிறுத்த முயன்றனா்.
பின்னா் மனைக்கு சொந்தகாரருடன் சமரசம் பேசி 15 நாள்களுக்குள் இந்தப் பிரச்னையை சுமுகமாக முடிப்பதாகவும். இல்லையெனில் கோயிலை தாங்களே அகற்றிக் கொள்வதாகவும் கூறி கோரிக்கை மனு அளித்தனா். அதன்பேரில் வருவாய்த துறையினா் மக்களுக்கு கால அவகாசம் அளித்துச் சென்றனா்.