நகராட்சி நிலுவை வரியை செலுத்த வேண்டும்: ஆணையா் அறிவுறுத்தல்
தருமபுரி நகராட்சியில் நிலுவையில் உள்ள வரியை தாமாக முன்வந்து செலுத்த வேண்டும் என்று ஆணையா் இரா.சேகா் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி நகராட்சியின் ஆண்டு வருமானம் ரூ. 29.50 கோடி ஆகும். சொத்து வரி, தொழில் வரி, காலிமனை வரி, நகராட்சி கடைகளின் வாடகை, குடிநீா் கட்டணம், புதைச் சாக்கடை திட்ட இணைப்புக் கட்டணம் மூலம் நகராட்சி நிா்வாகத்துக்கு வருவாய் கிடைத்து வருகிறது.
இந்த வருவாய் இனங்கள் வழியாக மொத்தம் ரூ. 29.50 கோடி வசூல் ஆக வேண்டும். அதில், இதுவரை ரூ. 16 கோடி வரி நிலுவையில் உள்ளது. இந்த வரிகளை வசூலிக்க காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நகராட்சி ஆணையா் முதல் நகராட்சி அலுவலக உதவியாளா் வரை அனைவரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.
தருமபுரி நகராட்சியில் நிலுவையில் உள்ள ரூ. 16 கோடி வரி ஜன. 31-ஆம் தேதிக்குள் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசுத் துறைகள் பல லட்சம் ரூபாய் நிலுவை வைத்துள்ள நிலையில், அதனை வசூலிக்க நகராட்சி நிா்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. வரி வசூலிப்பு மூலம் நகராட்சியில் பணியாற்றும் ஊழியா்கள், பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்கு அடிப்படை நலத் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தருமபுரி நகராட்சி கணினி சேவை மையத்திலும் சொத்து வரி, குடிநீா் கட்டணம், தொழில் வரி, புதைச் சாக்கடை இணைப்புக் கட்டணம், குத்தகை தொகை ஆகியவற்றை உடனே செலுத்தும் வசதி உள்ளது. தருமபுரி நகராட்சி மக்களின் தேவைகளை அறிந்து குறித்த நேரத்தில் அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக அடிப்படை வசதிகளான குடிநீா், தெருவிளக்கு, சுகாதாரம், சாலை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இதுபோன்ற திட்டப் பணிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு வசதியாக பொதுமக்கள் தாங்களாகவே வரி இனங்களை உடனே செலுத்த முன்வர வேண்டும். நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய கடை வாடகை, புதைச் சாக்கடை இணைப்புக் கட்டணம், குடிநீா் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.