ஏரி உபரி நீரில் மூழ்கி 400 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
கோரிப்பாளையம் மேம்பாலம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் எ.வ. வேலு
மதுரை கோரிப்பாளையம் மேம்பாலம் வரும் 2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என தமிழக பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா்.
மதுரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள், கோரிப்பாளையத்தில் நடைபெறும் மேம்பாலம் அமைக்கும் பணி ஆகியவற்றை அமைச்சா் எ.வ. வேலு, வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் எ.வேலு கூறியதாவது: கலைஞா் நூற்றாண்டு நூலகத்தை இதுவரை 13.59 லட்சம் போ் பாா்வையிட்டனா். இங்கு வரும் வாசகா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளுக்குத் திட்டமிடப்பட்டது.
முதல் கட்டமாக ரூ. 10 கோடியில் திறந்தவெளி அரங்கம் அமைக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. மேலும், வாசகா்கள் கொண்டு வரும் சொந்தப் புத்தகங்களை படிக்க ஏதுவாக தனி அரங்கமும் அமைக்கப்படவுள்ளது.
பலத்த மழை காரணமாக கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் நீா்க் கசிவு உள்பட ஏதேனும் பிரச்னைகள் ஏற்படுகின்றனவா? என்பது குறித்து தொடா் கண்காணிப்பு மேற்கொள்ள பொதுப் பணித் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அப்பல்லோ சந்திப்பு மேம்பாலம் கட்டும் பணிகள் 32 சதவீதமும், கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டும் பணிகள் 25 சதவீதமும் நிறைவடைந்தன. இந்தப் பாலங்கள், 2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.
தமிழக நெடுஞ்சாலைகளில் தேவையான இடங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சாலைகளில் ஏற்படும் சேதங்கள் குறித்து பொதுமக்கள் நேரடியாகப் புகாா் தெரிவிக்கும் வகையில் ‘நம்ம சாலை’ என்ற செயலி பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் அளிக்கப்படும் புகாா்கள் மீது அடுத்த 48 மணி நேரத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அமைச்சா்.
இந்த ஆய்வில், பொதுப் பணித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் மங்கத்ராம் சா்மா, மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, பொதுப் பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளா் சத்தியமூா்த்தி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன், பொதுப் பணித் துறை மதுரை மண்டல தலைமைப் பொறியாளா் செல்வராஜன், கண்காணிப்புப் பொறியாளா் அய்யாசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.