கிராமத்தின் பெயரை மாற்ற தடை கோரி வழக்கு: மாவட்ட ஆட்சியா் பரிசீலிக்க உத்தரவு
ஆத்திக்காட்டுவிளை கிராமத்தின் பெயரை மாற்றுவதற்குத் தடை விதிக்கக் கோரிய மனுவை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த ராஜபாண்டியன் தாக்கல் செய்த பொது நல மனு: கன்னியாகுமரி மாவட்டம், ஆத்திக்காட்டுவிளை கிராமத்தின் பெயரை மாற்றுவது தொடா்பாக பிரச்னை எழுந்த நிலையில், உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, ஊரின் பெயரை மாற்றக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, அனைத்து இடங்களிலும் ஆத்திக்காட்டுவிளை என்ற பெயரே பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சத்துணவுக் கூடம், ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட அரசுப் பதிவேடுகளில் ஆத்திக்காட்டுவிளை என்பதற்குப் பதிலாக சியோன்புரம் என்ற பெயா் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், வீட்டு வரி, குடிநீா் வரி ரசீதுகளிலும் கிராமத்தின் பெயா் சியோன்புரம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் புகாா் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, வீட்டு வரி, குடிநீா் வரி ரசீது, அனைத்து அரசு அலுவலக ஆவணங்களிலும் ஆத்திக்காட்டுவிளை என்னும் பெயரைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கோரிக்கையை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.