காலை உணவு - புதுமைப் பெண் திட்டங்களால் கிடைத்த பலன்கள்: மாநில திட்டக் குழு ஆய்வ...
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு பிரியங்கா வலியுறுத்தல்
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்களைத் தடுக்க அந்நாட்டு இடைக்கால அரசிடம் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
மக்களவையில் அவா் பேசியதாவது: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவா்கள் என சிறுபான்மையின சமூகத்தினா் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதை தடுத்து, இப்பிரச்னைக்கு தீா்வுகாண அந்நாட்டு இடைக்கால அரசுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்.
விஜய் திவஸ் கொண்டாடப்படும் இந்த தினத்தில் இந்தியாவிடம் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்த புகைப்படம் ராணுவ தலைமையகத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்றாா்.
‘பாலஸ்தீன’ கைப்பை: ‘பாலஸ்தீனம்’ என பெயரிடப்பட்ட கைப்பையுடன் மக்களவைக்கு பிரியங்கா காந்தி வந்ததால் அவையில் பாஜக எம்.பி.க்களுக்கும் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது.
வயநாடு தொகுதியில் அண்மையில் நடைபெற்ற இடைத்தோ்தலில் வெற்றிபெற்ற பிரியங்கா காந்தியை நேரில் அழைத்து தில்லியில் உள்ள பாலஸ்தீன தூதரக பொறுப்பு அதிகாரி அபு ஜசீா் வாழ்த்துகள் தெரிவித்த நிலையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவளிப்பது போன்ற கைப்பையுடன் மக்களவைக்கு பிரியங்கா காந்தி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக, ‘காஸாவில் படுகொலையை நிகழ்த்தி வரும் இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகுவுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்’ என எக்ஸ் வலைதளத்தில் பிரியங்கா காந்தி பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
போராட்டம்: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களை தடுக்கக் கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் பிரியங்கா தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.