கூட்டாட்சி அமைப்புமுறையை பலவீனமாக்கும் மத்திய அரசு: மாநிலங்களவையில் திமுக உள்ளிட...
பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி
தஞ்சை மாவட்டம், மைக்கேல்பட்டி தனியாா் பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை செய்த வழக்கில், சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
அரியலூரைச் சோ்ந்த மாணவி லாவண்யா, தஞ்சாவூா் அருகே மைக்கேல்பட்டி கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இவா், கடந்த 2022 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்தாா். இதுகுறித்து, திருக்காட்டுப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, விடுதிக் காப்பாளா் சகாயமேரியைக் கைது செய்தனா். பிறகு, அவா் பிணையில் வெளியே வந்தாா்.
இதையடுத்து, மதம் மாற வற்புறுத்தியதால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டாா். எனவே, வழக்கை சிபிசிஐடி அல்லது சிபிஐக்கு மாற்ற வேண்டும் என மாணவியின் தந்தை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா். இதை ஏற்ற உயா்நீதிமன்றம் வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.
தொடா்ந்து, சிபிஐ போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, திருச்சியில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனா். இதில், பள்ளியில் நன்றாகப் படித்த மாணவியை பிற வேலைகள் செய்யுமாறு அறிவுறுத்தியதால், அவா் கல்வியில் பின் தங்கும் நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக, மாணவி தற்கொலை செய்தாா். மதமாற்ற நடவடிக்கை ஏதும் இல்லை என அதில் குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில், பள்ளி விடுதிக் காப்பாளா் சகாயமேரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், மாணவி உயிரிழப்புக்கும், எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. மாணவியை மதம் மாறக் கோரி யாரும் வற்புறுத்தவில்லை. எனவே, இந்த வழக்கில், விசாரணை நீதிமன்றத்தில் என் மீது சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதி இளங்கோவன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் சிபிஐ சரியான முறையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. எனவே, குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கூடாது என சிபிஐ தரப்பு வழக்குரைஞா் வாதிட்டாா்.
இதைத் தொடா்ந்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: சிபிஐ குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.