காலை உணவு - புதுமைப் பெண் திட்டங்களால் கிடைத்த பலன்கள்: மாநில திட்டக் குழு ஆய்வ...
எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது: உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
புகழ்பெற்ற கா்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதைப் பாடகா் டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரில் ‘சங்கீத கலாநிதி’ விருதை, 2005-ஆம் ஆண்டுமுதல் ‘மியூசிக் அகாதெமி’ வழங்கி வருகிறது. சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரபல கா்நாடக இசைப் பாடகா் டி.எம்.கிருஷ்ணாவுக்கு நிகழாண்டு விருது வழங்கப்பட்டது.
முன்னதாக, சமூக ஊடகங்களில் எம்.எஸ்.சுப்புலட்சுமியை விமா்சித்து வரும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அவரது பெயரிலான விருது வழங்குவதற்கு தடை விதிக்கக் கோரி, அவரின் பேரன் வி.ஸ்ரீநிவாசன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரை பயன்படுத்தாமல் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கலாம் என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது. தொடா்ந்து, மியூசிக் அகாதெமியின் மேல்முறையீட்டில் இடைக்கால உத்தரவை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த நிலையில், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் ஸ்ரீநிவாசன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என்.பாட்டீ ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் எம்.எஸ்.சுப்புலட்சுமியை அவமதித்து டி.எம்.கிருஷ்ணா கட்டுரைகளை எழுதியதாக கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் என்.வெங்கடராமன் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘விருது ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருது பெற்றவராக டி.எம். கிருஷ்ணாவை அங்கீகரிக்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறோம்’ என்றனா். மேலும், இவ்விவகாரத்தில் டி.எம்.கிருஷ்ணாவும், மியூசிக் அகாதெமி தரப்பும் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.