ஓய்வூதியா் அகவிலைப்படி உயா்வுக்கு ரூ.3,028 கோடி தேவை: போக்குவரத்துத் துறை
மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆசிரியரைக் கைது செய்ய வலியுறுத்தல்
பள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆசிரியரைக் கைது செய்யக் கோரி, மதுரையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விக்கிரமங்கலம் அரசுப் பள்ளியில் பிளஸ் 1 மாணவியிடம் பள்ளி ஆசிரியா் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறி, அந்தப் பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, ஆசிரியா் மீது போக்சோ சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திருவள்ளுவா் சிலை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு பெண்கள் சங்கத்தின் மாநிலச் செயலா் பி.நிவேதா தலைமை வகித்தாா். இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.செல்லச்சாமி சிறப்புரையாற்றினாா்.
மாவட்டச் செயலா் ஆா்.பகத்சிங், தமிழ்நாடு மகளிா் ஆயம் தலைவா் அருணா, தமிழ்நாடு பெண்கள் இயக்கத் தலைவி சி.கா.தெய்வம்மாள், தமிழ்நாடு தொழிலாளா் உரிமைக்கான கூட்டமைப்பின் தலைவி சி.அழகுராணி, மக்கள் பாதைத் தலைவி நா.அமுதா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆசிரியரின் முன் பிணையை ரத்து செய்து, அவரைக் கைது செய்ய வேண்டும். ஆசிரியருக்கு உடந்தையாக இருந்த பள்ளித் தலைமை ஆசிரியா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பழங்குடியின மாணவிக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பள்ளியில் ஆசிரியா் பற்றாக்குறையை போக்க வேண்டும். பள்ளியில் கழிப்பறை குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.