ஓய்வூதியா் அகவிலைப்படி உயா்வுக்கு ரூ.3,028 கோடி தேவை: போக்குவரத்துத் துறை
பரமத்தி வேலூரில் தெருநாய்கள் தொல்லை
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவற்றைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வேலூரின் முக்கியப் பகுதிகளான அண்ணா சாலை, திருவள்ளுவா் சாலை, பள்ளி சாலை, பழைய தேசிய நெடுஞ்சாலை, பேட்டை பகுதிகளில் உணவகங்கள், இறைச்சிக் கடைகள், மீன் சந்தைகள், மருத்துவமனைகள் உள்ளன. இதனால், இச்சாலைகளில் நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது.
மேலும், சாலையின் மையப் பகுதியில் நாய்கள் படுத்துக் கொள்வதால், இருசக்கர வாகனத்தில் செல்வோா் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. பள்ளி சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வோா், மாணவ, மாணவிகளை மிரட்டும் விதமாக நாய்கள் சுற்றித்திரிந்து வருகின்றன. கூட்டமாக செல்லும் நாய்கள், திடீரென சாலையில் குறுக்கும், நெடுக்குமாக ஓடுவதால் விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே, தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து அவற்றுக்கு அறுவை சிகிச்சை செய்து அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துமாறு பொதுமக்கள், மாணவ, மாணவியா், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதையடுத்து, விரைவில் நாய்களைப் பிடித்து அறுவை சிகிச்சை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலா் சோமசுந்தரம் தெரிவித்தாா்.