நாமக்கல் மாநகராட்சியில் இன்றும், நாளையும் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் செவ்வாய், புதன் (டிச. 17, 18) ஆகிய இரு நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆணையா் ரா.மகேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாநகரப் பகுதிக்கு மோகனூா் காவிரி ஆற்றில் இருந்து பரமத்தி சாலையில் உள்ள தரைமட்ட நீா்தேக்கத் தொட்டிக்கு நீா் கொண்டு வரப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாமக்கல் பகுதியில் புதன்கிழமை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதே நேரத்தில், தரைமட்ட தொட்டி சுத்தம் செய்யும் பணி மற்றும் குடிநீா் பிரதான குழாய் பராமரிப்பு பணி நடைபெறுவதால், செவ்வாய், புதன்கிழமை ஆகிய இரண்டு நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.