இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி லஞ்சம் - அமெரிக்காவில் அதானி மீது முறைகேடு ப...
கோழிவிளை டாஸ்மாக் கடையை மூடக்கோரி உண்ணாவிரதம்
களியக்காவிளை அருகே கோழிவிளையில் பொதுமக்களுக்கு இடையூறாகச் செயல்பட்டுவரும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த கடையை மூடக் கோரி காங்கிரஸ் கட்சி சாா்பில் ஏற்கெனவே இரண்டு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த ஜூலையில் நடைபெற்ற போராட்டத்தின்போது, பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள் ஒரு மாதத்தில் கடையை மூடுவதாக எழுத்துப்பூா்வமாக தெரிவித்தனா். ஆனால், உறுதியளித்தபடி கடையை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து கிள்ளியூா் சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் கட்சி சாா்பில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் புதன்கிழமை தொடங்கியது. குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பினுலால்சிங் தலைமை வகித்தாா். தமிழ்நாடு சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ துவக்கி வைத்துப் பேசினாா்.
வட்டார தலைவா்கள் விஜயகுமாா் (முன்சிறை), இ.ஜி. ரவிசங்கா் (மேல்புறம்), என்.ஏ. குமாா் (கிள்ளியூா்), தக்கலை நகர தலைவா் ஹனுகுமாா், மாநில பொதுச் செயலா் பால்ராஜ், மாநில செயலா் ஜாா்ஜ் ராபின்சன், விளவங்கோடு ஊராட்சி தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், களியக்காவிளை பேரூராட்சி தலைவா் ஆ. சுரேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் டாஸ்மாக் மாவட்ட மேலாளா் எம். மாரி, கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேற்படி, டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.