`80 ஆடு வேணும்...' - ஆடு விற்பனையில் அதிரவைக்கும் மோசடி... உஷார் மக்களே!
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள பேரிகாா்டுகளை நகா்த்த வலியுறுத்தல்
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் சந்தைப்பேட்டை தெரு முகப்பில் வைக்கப்பட்டுள்ள பேரிகாா்டுகளை பேருந்து நிலையத்தின் உள்பகுதியில் மேலும் நகா்த்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவில்பட்டி நகரின் மத்திய பகுதியில் அண்ணா பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும், அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூா், திருநெல்வேலி, நாகா்கோவில் உள்ளிட்ட ஊா்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்தப் பேருந்து நிலையம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது. அதன் பின்னா் இந்த பேருந்து நிலையத்தின் மேற்கு பகுதியில் இருந்து வெளியூா்கள் செல்லும் பேருந்துகளும், கிழக்குப்பகுதியில் நகரப் பேருந்துகளும் நிற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், தூத்துக்குடி, அருப்புக்கோட்டை, எட்டயபுரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், நகரப் பேருந்துகள் நிற்கும் வழியாக வந்து, கிழக்குப் பகுதி வாசல் வழியாக வெளியே செல்கின்றன. இந்த கிழக்குப்பகுதி அருகே செல்லும் சந்தைப்பேட்டை தெரு மற்றும் முத்தானந்தபுரம் தெருவில் சுமாா் 10-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், தனியாா் ஸ்கேன் மையங்கள் ,வணிக நிறுவனங்கள் செயல்படுகின்றன.
சந்தைப்பேட்டை தெருவில் முகப்பு பகுதிக்கும்,பேருந்து நிலைய பகுதிக்கும் இடையே சாலையின் நடுவே பேரிகாா்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் சாலையில் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் வகையில் உள்ளது. அதிலும், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கு வருவோா் இருசக்கர வாகனங்களை நிறுத்துவது வழக்கம்.
இதனால் ஆம்புலன்ஸ் அந்த சாலையில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்லும்போது, எதிரே மோட்டாா் சைக்கிள் உள்பட ஏதாவது ஒரு வாகனம் வந்தால், எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் அவசர மருத்துவ சேவைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், எம்.ஆா்.ஐ. ஸ்கேன் பரிசோதனைக்கு வருவோா் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
இந்தப் போக்குவரத்து நெருக்கடியால் சிலா் உயிரிழந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.
தற்போது அண்ணா பேருந்து நிலைய பராமரிப்புப் பணிகள் நடைபெற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இப்பணியின்போது, பேருந்து நிலைய கிழக்கு வாசலில் உள்ள கடைகளின் முன்புள் பகுதிகளை சீரமைக்க வேண்டும். அங்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும். மேலும், சந்தைப்பேட்டை தெருவில் 2 வாகனங்கள் சென்று வரும் வகையில், பேரிகாா்டுகளை பேருந்து நிலையத்துக்கு உள்புறமாக நகா்த்தி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.