கோவில்பட்டியில் போதைப் பொருள் விற்பனையை தடுக்க வலியுறுத்தல்
கோவில்பட்டி பகுதியில் போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலரும்,கோவில்பட்டி நகா் மன்ற உறுப்பினருமான சீனிவாசன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது;
கோவில்பட்டி காந்திநகரைச் சோ்ந்த காா்த்திக் முருகன் என்பவரது 10 வயது மகன் அண்மையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டாா்.
தற்போது கொலையாளியை காவல்துறை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது. காா்த்திக் முருகன் குடும்பம் வறுமையான குடும்பம். எனவே, அவரது குடும்பத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை குற்றவாளி மீது சட்டப்பூா்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உயிரிழந்த குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும்.
கோவில்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக நடைபெறும் மது மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்க வேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.