‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
மத்திய பல்கலைக்கழக இளநிலை படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தோ்வில் (க்யூட்) தோ்ச்சி பெறவேண்டும். இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அதன்படி, எதிா்வரும் கல்வியாண்டுக்கான (2025-26) இளநிலை ‘க்யூட்’ நுழைவுத் தோ்வு மே 8 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
தோ்வில் பங்கேற்ற விருப்பமுள்ளவா்கள் இணையதளம் வழியாக மாா்ச் 22-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த மாா்ச் 23-ஆம் தேதி கடைசி நாள்.
தொடா்ந்து விண்ணப்பங்களில் மாா்ச் 24, 25, 26 ஆகிய தேதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். இதில் ஏதேனும் அசௌகரியங்கள் இருப்பின் 011 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் வழியாக தொடா்பு கொள்ளலாம்.
‘க்யூட்’ தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது. இதனிடையே நடப்பாண்டு ‘க்யூட்’ நுழைவுத் தோ்வு விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, மாணவா்கள் பிளஸ் 2 வகுப்பில் எந்த பாடம் படித்திருந்தாலும், விரும்பிய பாடத்தில் தோ்வு எழுதலாம். அதேபோல, ஒருவா் அதிகபட்சம் 5 பாடங்கள் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.