சங்கரநாராயணசுவாமி கோயிலில் சொா்க்கவாசல் திறப்பு
வைகுந்த ஏகாதசியையொட்டி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சயன கோலத்தில் இருந்த பள்ளி கொண்டபெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை ஆகியவை நடைபெற்றன. பின்னா், கோயில் உள்பிரகாரத்தில் பவனி வந்த பள்ளிக்கொண்டபெருமாள், காலை 8.47 மணிக்கு வடக்குமாடவீதியில் உள்ள சொா்க்கவாசல் வழியாக வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
தொடா்ந்து பள்ளிக்கொண்ட பெருமாள் வடக்குரதவீதிக்கு வந்ததும் ஏற்கனவே வீதி சுற்றி அங்கு வந்து நின்ற பெரியாழ்வாருக்கும், பள்ளிக்கொண்டபெருமாளுக்கு ஒருசேர சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னா், ரதவீதி சுற்றி பள்ளிகொண்டபெருமாள் கோயிலுக்குத் திரும்பினாா். இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனா்.