20 கிலோ தங்கம், 300 கேள்விகள்; தாம்பரம் ரூ.4 கோடி விவகாரத்தில் புதுச்சேரி பாஜக எ...
சங்கராபரணி, தென்பெண்ணையாற்று பகுதிகளிலும் அகழாய்வு நடத்த வலியுறுத்தல்
விழுப்புரம் மாவட்டத்தில் சங்கராபரணி, தென்பெண்ணையாற்றுப் பகுதிகளிலும் அகழாய்வு நடத்த வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்த பேரவையின் ஒருங்கிணைப்பாளரும், எழுத்தாளருமான கோ.செங்குட்டுவன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: விழுப்புரத்தில் கடந்த 28-ஆம் தேதி நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சங்ககாலத் தொல்லியல் தடயங்கள் கண்டெடுக்கப்பட்ட பம்பையாற்றுப் பகுதியில் அகழாய்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறாா். இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி அருகே சங்கராபரணி ஆற்றங்கரையிலுள்ள செ.கொத்தமங்கலம், விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றங்கரையிலுள்ள எஸ்.மேட்டுப்பாளையம் (பூவரசங்குப்பம்), தற்போதைய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பரிக்கல் ஆகிய இடங்களிலும் எழுத்து, குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள், போா்வீரா்கள் பயன்படுத்திய வாள் உள்ளிட்ட பொருள்கள் கடந்த காலங்களில் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த இடங்கள் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட (சங்க கால) மக்களின் வாழ்வியல், வரலாற்றுத் தடயங்கள் நிறைந்த பகுதிகளாகும். இந்த இடங்களிலும் தொல்லியல் துறை சாா்பில் அகழாய்வு நடத்தப்பட்டால், பழந்தமிழ் வரலாற்றுக்கு வலு சோ்க்கும் பல்வேறு ஆதாரங்கள் கிடைக்கக்கூடும். இதற்கும் முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.