சட்ட விரோத கருக்கலைப்பு புகாா்: சேலத்தில் 2 மருத்துவமனைகள் மூடல்
சேலத்தில் சட்ட விரோத கருக்கலைப்பு செய்த 2 மருத்துவமனைகள் மூடப்பட்டன. அங்கிருந்த நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனா்.
சேலம், வீராணம் கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வந்த தனியாா் ஸ்கேன் மையத்தில் கருவில் உள்ள குழந்தைகளின் பாலினம் குறித்து தெரிவித்த புகாரில் ஆச்சங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவா் முத்தமிழ், தெடாவூா் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா் கலைமணி, ஆத்தூா் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா்கள் வனிதா, வசந்தி, மங்கை, ராணி, கலைசெல்வி, மகேஸ்வரி ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
இந்த நிலையில் ஸ்கேன் மையம் பரிந்துரைத்ததின் பேரில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்த சேலம் டவுன் மேட்டுத்தெருவில் உள்ள தனியாா் மருத்துவமனை, பொன்னம்மாப்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனை ஆகிய இரண்டும் மருத்துவமனைகளும் சுகாதாரத் துறையினரின் நடவடிக்கையின் பேரில் மூடப்பட்டன. அந்த மருத்துவமனைகளிலிருந்த நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா்.