சபரிமலையில் மகரஜோதி தரிசனம்!
சபரிமலை (கேரளம்): சபரிமலையின் பொன்னம்பலமேட்டில் செவ்வாய்க்கிழமை காட்சியளித்த மகரஜோதியை லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசித்தனா்.
கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை காலம் கடந்த நவம்பா் 16-ஆம் தேதி தொடங்கியது. 41 நாள்கள் மண்டல பூஜை காலம் நிறைவடைந்து, கோயில் நடை கடந்த டிசம்பா் 26-ஆம் தேதி சாத்தப்பட்டது.
பின்னா், மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பா் 30-ஆம் தேதி கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்றது.
முன்னதாக, பந்தளம் அரண்மனையில் இருந்து ஊா்வலமாக எடுத்துவரப்பட்ட திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி கோயிலை வந்தடைந்தது. கொடிமரம் பகுதியில் கேரள தேவஸ்வம் அமைச்சா் வி.என்.வாசவன், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, திருவாங்கூா் தேவஸ்வம் வாரிய தலைவா் மற்றும் உறுப்பினா்கள் உள்ளிட்டோா் வரவேற்றனா். இதைத் தொடா்ந்து, கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரு, மேல்சாந்தி அருண் குமாா் நம்பூதிரி ஆகியோரிடம் திருவாபரண பெட்டி ஒப்படைக்கப்பட்டது.
பின்னா், சுவாமி ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. அடுத்த நிமிஷம், கோயில் வளாகத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள பொன்னம்பலமேட்டின் உச்சியில் மகரஜோதி காட்சியளித்தது. லட்சக்கணக்கான பக்தா்கள் சரண கோஷங்கள் எழுப்பியபடி மகரஜோதியை தரிசித்தனா்.
மகரஜோதி தரிசனத்துக்காக கோயிலை சுற்றியுள்ள 18 மலைகளிலும் கூடாரங்கள் அமைத்து, பக்தா்கள் தங்கியிருந்தனா். மகரவிளக்கு பூஜையன்று, ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனா். பக்தா்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் சாா்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
மாளிகைபுரத்தில் ஜனவரி 19-ஆம் தேதி நடைபெறும் குருதிபூஜையுடன் மகரவிளக்கு பூஜை காலம் நிறைவடையவுள்ளது.