சபரிமலையில் வரும் 26-ம் தேதி மண்டல பூஜை பக்தர்களுக்கு கட்டுப்பாடு அறிவித்த தேவசம்போர்டு
திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் வரும் 26-ம் தேதி மதியம் 12 மணி முதல் 12.30 மணி வரை மண்டல பூஜை நடைபெறும். தந்தி கண்டரரு ராஜீவரர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். டிசம்பர் மாதம் 22-ம் தேதி காலையில் ஆறன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி புதன்கிழமை மதியம் 1.30 மணி-க்கு பம்பா வந்து சேரும். பம்பாவில் தங்க அங்கிக்கு தேவசம்போர்டு அமைச்சர் வி.என்.வாசவன் வரவேற்பு அளிக்கிறார். அன்று மாலை 6 மணிக்கு சபரிமலை சன்னிதானத்திற்கு சென்று சேரும் தங்க அங்கியை கொடிமரம் முன்பு வைத்து தேவசம்போர்டு உறுப்பினர்களுடன் சேர்ந்து பெற்றுக்கொள்கிறேன். தொடர்ந்து சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு தீபாதாரணை நடைபெறும். டிசம்பர் 26-ம் தேதி நெய் அபிஷேகம் உள்ளிட்ட சடங்குகள் நடைபெறாது. 26-ம் தேதி இரவு 11 மணி-க்கு ஹரிவராசனம் பாடப்பட்டு நடை அடைக்கப்படும். மண்டல பூஜை சம்பந்தமாக சடங்குகள் நிறைவு பெற்ற பின், மகரவிளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் மாதம் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை மீண்டும் திறக்கப்படும். 2025 ஜனவரி 16-ம் தேதி ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி தரும் மகர விளக்கு நிகழ்வு நடைபெற உள்ளது.
மண்டல பூஜை சமயத்தில் பக்தர்கள் எண்ணிக்கையில் கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 25-ம் தேதி ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ள 50,000 பக்தர்களும் டிசம்பர் 26-ம் தேதி 60 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. 25 மற்றும் 26-ம் தேதிகளில் 5000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங் வழங்க வேண்டும் என ஐகோர்ட் அறிவுறுத்தி உள்ளது. மகரவிளக்கு மகோத்சவத்தை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி ஆன்லைனில் முன்பதிவு செய்த 50 ஆயிரம் பக்தர்களையும் ஜனவரி 16-ம் தேதி 40 ஆயிரம் பக்தர்களுக்கும் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும். நேற்று வரை 30,87,049 பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 26,41,141 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்திருந்தனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 4,45,198 பக்தர்கள் அதிகமாக தரிசனம் செய்துள்ளனர்.
பக்தர்கள் எந்தக் குறைபாடும் இல்லாமல் பூரண திருப்தியுடன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு மலை இறங்குகிறார்கள். பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் இணைந்து செயல்பட்டதால் இது சாத்தியமானது. ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டதை அடுத்தே பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க முடிந்தது. கடந்த ஆண்டு வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஏற்பட்ட கூட்டம் இந்த முறை இல்லை. மலையேறிய அனைவருக்கும் சுவாமி தரிசனத்துக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தை கையாளுவதில் போலீஸார் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். நல்ல முறையில் மண்டல காலம் பூர்த்தியாக உள்ளது.
மின்சாரத்தில் தன்னிறை பெறுவதற்காக சபரிமலையில் சூரிய மின் திட்டம் செயல்படுத்தப்படும். அதற்காக சோலார் திட்டங்கள் பேனர்கள் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சோலார் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் மின்சாரத்துக்கு செலவாகும் பெரிய அளவிலான தொகை மிச்சப்படும். அதன் மூலம் கிடைக்கும் தொகை பக்தர்களின் சேவைக்காக செலவு செய்ய முடியும். தேவசம்போர்டின் கீழ் உள்ள முக்கியமான 24 கோயில்களில் சோலார் மின்சாரம் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். சபரிமலையின் முகாம் பகுதியான நிலக்கரியில் பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்காக 7 கட்டடங்கள் கட்டும் திட்டத்தின் கீழ் 3 கட்டடங்களின் கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டன. அவற்றை வரும் 26-ம் தேதி மாலை 4 மணிக்கு தேவசம்போர்டு அமைச்சர் வி.என்.வாசவன் திறந்து வைக்க உள்ளார். 3 அடுக்கு மாடி உள்ள கட்டடங்களில் 20,200 பக்தர்கள் ஓய்வெடுக்க முடியும்.
2018-ம் ஆண்டு மழை வெள்ள பிரளயத்தைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பம்பா சங்கமம், அதன் பிறகு ஏற்பட்ட கொரோனா போன்றவற்றால் முடங்கியது. பம்பா சங்கமம் இந்த ஆண்டு மீண்டும் தொடங்கப்படும். ஜனவரி 12-ம் தேதி மாலை 4 மணிக்கு தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் பம்பா சங்கமம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார். நடிகர் ஜெயராம் இதில் கலந்துகொள்கிறார். திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஏற்படுத்தப்பட்டு 75-வது ஆண்டு நிறைவடைவதை ஒட்டி பம்பா சங்கமம் நிகழ்ச்சியில் 75 தீபங்கள் ஏற்றப்படும்.
சபரிமலை மகர விளக்கு மகோத்ஸவத்தை ஒட்டி சபரிமலை ஐயப்ப சுவாமியின் உருவம் பொறித்த தங்க லாக்கெட்டை திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட உள்ளது. 2 கிராம், 4 கிராம், 6 கிராம், 8 கிராம் எடைகளில் லாக்கெட்டுகள் வெளியிடப்படும். மகரவிளக்கு பூஜையைத் தொடர்ந்து ஜனவரி 14-ம் தேதி நடைபெறும் ஹரிவராசனம் விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் வி.என்.வாசவன் லாக்கெட்டை வெளியிடுவார்" என்றார்.