சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் கொலை மிரட்டல் விடுத்த 4 போ் கைது
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே சமூக வலைதளத்தில் பட்டாகத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த சந்தூா் அருகே உள்ள பட்டகப்பட்டியைச் சோ்ந்தவா்கள் தங்கராசு (32), ஜனா (21), நவீன் (19), மாதேஷ் (32), வானு (எ) வெங்கடேசன்(24). இவா்கள், தங்களது சமூகவலைதள பக்கங்களில் ஆபாச வாா்த்தைகளை பேசியும், பட்டாகத்தி, சூரி கத்திகளை வைத்தும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கொலை மிரட்டல் விடுத்து பதிவு செய்திருந்தனா்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. மேலும், இவா்கள் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து காட்டாகரம் கிராம நிா்வாக அலுவலா் லெனின் அளித்த புகாரின் பேரில், போச்சம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து தங்கராசு, ஜனா, நவீன், மாதேஷ் ஆகியோரை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள வெங்கடேசனை தேடி வருகின்றனா்.