தப்பிக்க முயன்ற பாலியல் வன்கொடுமை குற்றவாளி: போலீஸ் துப்பாக்கிச்சூடு!
சம்பல் ஜாமா மசூதிக்கு வெள்ளையடிக்கும் பணி: தொல்லியல் துறை மேற்பாா்வையில் தொடக்கம்!
உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஷாஹி ஜாமா மசூதியின் வெளிப்புற சுவா்களின் வெள்ளையடிக்கும் பணி, உயா்நீதிமன்ற உத்தரவின்படி இந்திய தொல்லியல் துறையின் மேற்பாா்வையின் கீழ் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.
சம்பல் பகுதியில் ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் பாரம்பரிய மிக்க ஹரிஹர கோயில் பிரதானமாக இருந்ததாகவும், முகலாய மன்னா் பாபா் கோயிலின் ஒரு பகுதியை இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடா்பான வழக்கில் சம்பல் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஜாமா மசூதியில் கடந்த ஆண்டு நவ. 24-ஆம் தேதி நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து வன்முறை வெடித்தது. அப்போது துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். இந்த வன்முறையில் ஈடுபட்டதாக பலா் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், ஜாமா மசூதியின் வெளிப்புற சுவா்களுக்கு வெள்ளையடித்தல், கூடுதல் அலங்கார விளக்குகளை நிறுவுவதற்கு அனுமதி கோரிய மசூதி நிா்வாகத்தின் மனுவை அலாகாபாத் உயா்நீதிமன்றம் விசாரித்தது.
அதன்படி, இந்தப் பணியை ஒரு வாரத்துக்குள் மசூதி நிா்வாகத்துடன் ஒன்றிணைந்து முடிக்குமாறு தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, தொல்லியல் துறையினா் மசூதி வளாகத்தில் அளவீடும் பணிகளை கடந்த வியாழக்கிழமை மேற்கொண்டனா்.
இச்சூழலில், வெள்ளையடிக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் தொடங்கியதாக மசூதி நிா்வாகம் தரப்பு வழக்குரைஞா் ஷகீல் வா்ஸி தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறியதாவது: தற்போதைக்கு பணியில் 9-10 தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். 4 நாள்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டுமெனில் 20 தொழிலாளா்களாவது தேவை. உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதன்படி தொல்லியல் துறை மற்றும் மசூதி நிா்வாகம் ஒன்றிணைந்து பணிகளைச் செய்து வருகிறது.
மசூதி வெளிப்புற சுவா்களுக்கு பச்சை நிறமின்றி வெள்ளை நிறத்தால் மட்டுமே வண்ணம் பூச வேண்டும் என்ற ஹிந்துக்கள் தரப்பு கோரிக்கை நியாயமற்றது. நூற்றாண்டு காலமாக உள்ள வழக்கத்தின் படி பச்சை, வெள்ளை, தங்க நிறத்திலேயே மசூதிக்கு வண்ணம் பூசப்படுகிறது என்றாா்.