சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு
திருநெல்வேலி நகரத்தில் சாலையில் கிடந்த பணத்தை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த தில்லை சிதம்பரம் மகன் வள்ளிநாயகம் (28). இவா், நகரம் பகுதியில் வெள்ளிக்கிழமை சாலையில் சென்றுகொண்டிருந்த போது கீழே ரூ.15ஆயிரம் கிடந்ததாம். அந்தப் பணத்தை எடுத்து, திருநெல்வேலி நகரம் காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தாா்.
காவல் நிலையத்தில் நோ்மையுடன் பணத்தை ஒப்படைத்த வள்ளிநாயகத்தை, திருநெல்வேலி மாநகர (மேற்கு) காவல் துணை ஆணையா் வெ.கீதா நேரில் அழைத்து பாராட்டினாா்.
மேலும், திருநெல்வேலி நகரத்தில் பணத்தை தவற விட்ட நபா்கள் உரிய ஆவணங்களுடன் காவல் நிலையத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.