சிங்கம்புணரியில் வருவாய் ஆய்வாளா் அலுவலகம், குடியிருப்புகள் திறப்பு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளா் அலுவலகம், குடியிருப்புகளை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தாா்.
சிங்கம்புணரியில் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில் ரூ.16.05 கோடியில் கட்டப்பட்ட வட்டாட்சியா் அலுவலகம், வருவாய் ஆய்வாளா் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்.
இதையொட்டி, சிங்கம்புணரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினாா். மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி முன்னிலை வகித்தாா்.
விழாவில் பேரூராட்சி மன்றத் தலைவா் பி.அம்பலமுத்து, துணைத் தலைவா் செந்தில்குமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம.அருணகிரி, வட்டாட்சியா் எஸ்.பரிமளா, பேரூராட்சி உறுப்பினா் தாயுமானவன் ஆகியோா் கலந்து கொண்டனா்.