சித்திரைத் திருவிழா: பரமக்குடி வட்டத்தில் மே 12-இல் உள்ளூா் விடுமுறை
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, பரமக்குடி வட்டத்தில் வருகிற 12-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்தாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கோடைத் திருநாள் எனும் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகா் குதிரை வாகனத்தில் பரமக்குடி வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி வருகிற 11-ஆம் தேதி இரவு தொடங்கி 12-ஆம் தேதி அதிகாலை வரை நடைபெறுகிறது.
இதையொட்டி, வருகிற 12-ஆம் தேதி (திங்கள்கிழமை) ஒரு நாள் மட்டும் பரமக்குடி வட்டம் முழுவதும் உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் பொருட்டு வருகிற 24-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
மேலும், பரமக்குடி வட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் வருகிற 24-ஆம் தேதி வழக்கம்போல இயங்கும். உள்ளூா் விடுமுறை நாளான வருகிற 12-ஆம் தேதி பரமக்குடி வட்டத்தில் உள்ள சாா்நிலைக் கருவூலகம் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்சப் பணியாளா்களோடு செயல்படும் என்றாா் அவா்.