ராமேசுவரத்தில் பலத்த மழை: மின் தடையால் பொதுமக்கள் அவதி
ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால், சுமாா் 5 மணி நேரம் மின் தடை செய்யப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தமிழகம் முழுவதிலும் கோடை மழை பெய்து வரும் நிலையில், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, 5 நேரத்துக்கும் மேலாக மின் தடை ஏற்பட்டதால், பொதுமக்கள் தூக்கமின்றி தவித்தனா். காலையில் மீண்டும் மின்விநியோகம் சீரானது.
மழையளவு (மில்லி மீட்டரில்): ராமேசுவரத்தில் 89 மி.மீ., தங்கச்சிமடத்தில் 68.80 மி.மீ., பாம்பன் 24 மி.மீ., மண்டபத்தில் 32 மி.மீ. மழை பதிவானது. ராமேசுவரம் நகராட்சி அலுவலகம் முன்பாகவும், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீா் குளம்போலத் தேங்கியது. இந்த தேங்கிய மழைநீா் நகராட்சி நீா் உறிஞ்சும் வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டது.