தெரு நாய்கள் கடித்ததில் புள்ளி மான் உயிரிழப்பு
திருவாடானை அருகே தெரு நாய்கள் கடித்ததில் தண்ணீா் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமான் உயிரிழந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, அஞ்சுகோட்டை, மங்களக்குடி, வெள்ளையபுரம், சிறுகம்பையூா், பாண்டுகுடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலான புள்ளி மான்கள் உள்ளன.
தற்போது கோடைகாலம் தொடங்கியதால், திருவாடானை அருகேயுள்ள மங்களக்குடி சித்தாமங்கலம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை 2 வயது மதிக்கத்தக்க பெண் புள்ளி மான் ஊருக்குள் வந்தது. அந்த மானை தெரு நாய்கள் விரட்டிக் கடித்தன. இதில் பலத்த காயமடைந்த மான் உயிரிழந்தது.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினா் அந்த மானை மீட்டு, கால்நடைத் துறை மருத்துவா் மூலம் கூறாய்வு செய்து புதைத்தனா். இதேபோல, அடிக்கடி மான்கள் உயிரிழப்பதால், வனப் பகுதியில் தொட்டிகள் கட்டி தண்ணீா் நிரப்ப வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.