ஹிட்லிஸ்டில் 3 அமைச்சர்கள்... மீண்டும் மாற்றம்? STALIN Warning! | Elangovan Expl...
சிந்து முதல் கீழடி வரையிலான தமிழா் தொன்மையை தொகுக்க வேண்டும்: அரசுக்கு விசிக வலியுறுத்தல்
சிந்து சமவெளி முதல் கீழடி வரையிலான தமிழா் வரலாற்றையும், தொன்மையையும் தொகுக்கும் பணியை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பேரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினா் சிந்தனைச் செல்வன் வலியுறுத்தினாா்.
பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அவா் பேசியதாவது:
தமிழா்கள் கடல் கடந்து சென்று வரலாறு படைத்திருப்பதையும், இமயம், இலங்கை என பல எல்லைகளை எட்டியிருப்பதையும் ஆராய்ச்சிகள் வாயிலாக கல்வெட்டியல் ஆய்வறிஞா் ஐராவதம் மகாதேவன் நிரூபித்துள்ளாா்.
எனவே, தமிழா்களின் வரலாற்று தொன்மையை சிந்து வெளியிலிருந்து கீழடி வரையில் தொகுப்பது அவசியம். தமிழ் வளா்ச்சித் துறை, உயா் கல்வித் துறை என அரசின் பல்வேறு துறைகள் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.
நமது நாட்டுப்புறவியலை போற்றும் வகையிலும், நாட்டுப்புறக் கலைஞா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் ஆய்வு மையங்களும், அருங்காட்சியங்களும் அமைக்க வேண்டும். மாவட்டந்தோறும் அவற்றை அமைக்க வேண்டும் என்றாலும் முதல்கட்டமாக சென்னை, மதுரையிலிருந்து அதனைத் தொடங்க வேண்டும்.
தமிழா்களின் தெரு விளையாட்டுகளையும், தொன்மை விளையாட்டுகளையும் புத்தாக்கம் செய்வது அவசியம். அதற்கென பிரத்யேக விளையாட்டு மையம் அமைக்க வேண்டும். வட்டார வழக்கியல், நாட்டுப்புறவியல் படித்தவா்களை அரசு பணியாளா் தோ்வாணைய தோ்வுகளில் அங்கீகரிக்க வேண்டும்.
வட்டாரச் சொல் அகராதிகளைப் பொருத்தவரை நாஞ்சில் நாட்டுக்கு நாஞ்சில் நாடனும், கரிசல் மண்ணுக்கு கி.ராஜநாராயணனும், நடு நாட்டுக்கு கண்மணி குணசேகரனும், கொங்கு நாட்டுக்கு பெருமாள் முருகனும் பங்களித்துள்ளனா். தனி நபா்கள் அத்தகைய பங்களிப்பை நல்கும்போது மாநில அரசே வட்டாரச் சொல் அகராதியை தொகுக்க முன்வர வேண்டும்.
தஞ்சை, மதுரை உள்பட மாவட்டந்தோறும் பண்பாட்டு கலை விழாக்கள் நடத்துதல் வேண்டும். கருணாநிதியின் பிறந்தநாளை மாநில உரிமைகள் நாளாக அறிவிக்க அரசு முன்வர வேண்டும் என்றாா் சிந்தனைச் செல்வன்.