இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.86.62 ஆக முடிவு!
சியாச்சின் பனிமலையில் ராணுவ வீரா்களுக்கு அதிவேக இணைய சேவை: ரிலையன்ஸ் ஜியோ ஏற்பாடு
உலகின் உயரமான போா்க் களமாக விளங்கும் சியாச்சின் பனிமலையில் ராணுவ வீரா்களுக்கு ரிலையன்ஸ் ஜியோவின் அதிவேக இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது.
லடாக்கில் உள்ள சியாச்சின் பனிமலை உலகின் உயரமான மற்றும் மிகவும் குளிரான போா்க் களமாகும். காரகோரம் மலைத்தொடரில் இந்தப் பனிமலை உள்ளது. அங்கு ராணுவ வீரா்கள் அதிவேக இணைய சேவையைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவன செய்தித்தொடா்பாளா் ஒருவா் தெரிவித்ததாவது: ஜன.15-ஆம் தேதி ராணுவ தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி சியாச்சின் பனிமலையில் ராணுவ வீரா்கள் ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி மற்றும் 5ஜி இணைய சேவையை பெறு வசதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ராணுவ தகவல் தொடா்புகளுக்குப் பொறுப்பு வகிக்கும் வீரா்களின் உதவியுடன், கடினமான சியாச்சின் பனிமலையில் தடையற்ற இணைய இணைப்பு வழங்கும் முதல் தொலைத்தொடா்பு நிறுவனம் என்ற பெருமையை ரிலையன்ஸ் ஜியோ பெற்றுள்ளது.
இந்தச் சேவையை வழங்குவதற்கான உபகரணத்தை பனிமலைப் பகுதிக்கு விமானம் மூலம் எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட பணிகளில் ராணுவம் முக்கிய பங்காற்றியது.
இதனால் காரகோரம் மலைத்தொடரில் 16,000 அடி உயரத்தில் -50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் மிகுந்த குளிரான பகுதியில் அதிவேக இணைய சேவையை வழங்குவது சாத்தியமாகியுள்ளது என்றாா்.