பிச்சாட்டூா் ஆரணியாறு நீா்த்தேக்கத்தில் உபரிநீா் வெளியேற்றம்: வெள்ள அபாய எச்சரிக...
சிரியாவின் முன்னாள் அதிபர் கல்லறைக்கு தீவைப்பு!
சிரியாவில் முன்னாள் அதிபர் கல்லறைக்கு கிளர்ச்சிப்படையினர் தீவைப்பு!
கர்தஹா: சிரியா நாட்டின் முன்னாள் அதிபரும், தற்போது தப்பியோடிய அதிபர் பஷார் அல் - அஸாத்தின் தந்தையுமான ஹஃபேஸ் அல்-அஸாத்தின் கல்லறை, கிளர்ச்சிப் படையினரினால் தகர்க்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது.
அல்-அஸாத்தின் குடும்பத்திற்கு எதிராக வெடித்த கிளர்ச்சியில் அதன் அதிபர் பஷார் அல்-அஸாத் தப்பியோடினார். இதன்மூலம், அவரது குடும்பத்தின் 54 ஆண்டுக்கால ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த கிளர்ச்சிப் படையினர் சிரியாவை கைப்பற்றினார்கள்.
பின்னர், அந்நாடு முழுவதும் அல்-அஸாத் குடும்ப உறுப்பினர்களின் நினைவாக நிறுவப்பட்டிருந்த சிலைகளும் நினைவுச் சின்னங்களும் கிளர்ச்சியாளர்களாலும் பொதுமக்களாலும் தகர்க்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க: தில்லியில் மிகக்குறைந்த வெப்பநிலை பதிவு!
இதனைத் தொடர்ந்து தற்போது லத்தாகியா மாகாணத்திலுள்ள அவர்களது சொந்த ஊரான கர்தஹாவிலிருக்கும், அல்-அஸாத் குடும்ப ஆட்சியின் நிறுவனரும் சிரியாவின் முன்னாள் அதிபருமான ஹஃபேஸ் அல்-அஸாத்தின் கல்லறையை, ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் எனும் இஸ்லாமிய கிளர்ச்சிப் படையினர் தகர்த்து தீவைத்தனர்.
அழகிய கட்டடக்கலையில் கட்டப்பட்ட அவரது குடும்ப நினைவகம் தற்போது கிளர்ச்சிப்படையனரால் சேதாரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அதே வளாகத்தில்தான் ஹஃபேஸின் மனைவி மற்றும் அவரது மூத்த மகனான பேஸல் அல்-அஸாத்தின் கல்லறையும் உள்ளது.
ஹஃபேஸுக்கு பின்னர் பேஸல்தான் அந்நாட்டு அதிபர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1994 ஆம் ஆண்டு அவர் கார் விபத்து ஒன்றில் பலியானார். அதன் பின்னரே அவரது தம்பியான தற்போது தப்பியோடிய பஷார் அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்டு அவர்களது தந்தையின் மரணத்திற்குப் பிறகு அதிபராக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.