USAID அமைப்போடு நீண்ட கால தொடர்பு; பொய் சொல்கிறதா பாஜக? - Fact Checkers சொல்வதென...
சிறுமிகள் பாலியல் கொலை வழக்கு- மேற்கு வங்கத்தில் 6 மாதத்தில் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிப்பு
மேற்கு வங்க மாநிலத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, கொலை வழக்குகளில் கடந்த 6 மாதங்களில் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த 6 மாதங்களில் 7 தூக்கு தண்டனைகளை அங்குள்ள நீதிமன்றங்கள் விதித்துள்ளன. அதில் ஒரு வழக்கில் சொந்த குடும்பத்தினரை கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற 6 தூக்கு தண்டனைகளும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குகள் ஆகும்.
இதில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரின் மீதும் இந்திய தண்டனைச் சட்டம், பாரத நியாய சன்ஹிதா மற்றும் ‘போக்ஸோ’ சட்டங்களின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சிறுமிகளுக்கு எதிராக மிகக்கொடுமையான குற்றங்கள் என்பதால் அரிதினும், அரிதான வழக்காகக் கருதி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது தவிர கடந்த 7-ஆம் தேதி கொல்கத்தாவில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்த வழக்கிலும் அதிகபட்ச தண்டனை விதிக்கப்படும் என்று தெரிகிறது.
மேற்கு வங்கத்தில் கடைசியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி பாலியல் கொலை வழக்கில் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவா் அந்த குடியிருப்பில் வசித்து வந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தாா். 1990-ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த சம்பவத்தில் வழக்கு விசாரணை முடிந்து 2004-ஆம் ஆண்டு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு மேற்கு வங்கத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
மேற்கு வங்கத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் அதிகரித்து வருகின்றன. ‘போக்ஸோ’ வழக்குகள் அதிக அளவில் பதிவாகின்றன. சில இடங்களில் ஆசிரியா்களும் இதுபோன்ற பாலியல் கொடுமைகளில் ஈடுபடுவது பெற்றோா்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.