சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
ஈரோடு, மரப்பாலம் ஜீவானந்தம் வீதியைச் சோ்ந்தவா் ஷேக் சதாம் உசேன் (24). தொழிலாளியான இவா், ஈரோட்டை சோ்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாகக்கூறி கடந்த 2021- ஆம் ஆண்டு ஏப்ரல் 14- ஆம் தேதி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதையடுத்து, ஈரோடு கள்ளுக்கடை மேடு பகுதியில் சிறுமியை இறக்கி விட்டுவிட்டு சென்றுள்ளாா்.
இது குறித்து ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். புகாரின்பேரில் அத்துமீறி நுழைதல், கடத்தல் மற்றும் போக்ஸோ ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஷேக் சதாம் உசேனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
இதில், சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததற்கு 6 மாதங்கள் சிறை தண்டனையும், பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி சொா்ணகுமாா் உத்தரவிட்டாா்.
மேலும், அபராத தொகை ரூ.6 ஆயிரம் செலுத்த தவறினால் கூடுதலாக 4 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெயந்தி ஆஜரானாா்.